பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது.. திடுக்கிடும் தகவல் தெரிவித்த எஸ்.வி.சேகர்!
வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகர் எஸ்.வி. சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி சங்கத்தை தவறாக வழி நடத்துவதாக எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “ஒழுங்காக படிக்காத காரணத்தால்தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இப்போது மீண்டும் லண்டனுக்கு படிக்க சென்று இருப்பதாக கூறுகிறார். பாஜக தலைவராக மட்டுமில்லை அரசியலில் இருப்பதற்கே அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் நாற்பதற்கு பூஜ்ஜியம்தான் எடுக்க முடியும். தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். பாஜகவில் பிராமணர்களுக்கு இனப்படுகொலைதான் நடக்கிறது.
பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக நடிகை கஸ்தூரி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக அதுபோன்ற எந்த தாக்ககுதலும் நடைபெறவில்லை. எந்தக் கட்சி பிராமணர்களுக்கு சீட் கொடுக்கிறார்களோ, ஈ.டபிள்யூ.எஸ். (EWS) கொண்டு வருகிறார்களோ, பிராமணர் நல வாரியம் ஆரம்பிப்பதாக அறிவிக்கிறார்களோ அது திமுகவாக இருந்தாலும் நான் பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன்; நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் சமூகத்திற்காக பேசுகிறேன். எந்தவொரு காரணத்தையும் வைத்து அடுத்த சமூகத்தையோ, மதத்தையோ குறைத்து பேசுவது, அயோக்கியத்தனமான செயல். பொதுவெளியில் பேசும்போது என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என தெரிந்து கொண்டு போக வேண்டும். நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க செயல். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொல்வது தவறு.
விஜய் கட்சியில் சேரக்கூடியவர்கள் சீமான் கட்சியில் இருந்ததுதான் அதிகளவில் சேருவார்கள். நடிகர் விஜய்யால் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் உடனடியாக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எளிதில் பதவிக்கு வந்துவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறார். பல எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை ஜெயிக்க வைத்திருக்கிறார். எனவே கட்சிக்கு அவர் தேவைப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?