இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!

''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

Aug 28, 2024 - 00:11
Aug 28, 2024 - 00:12
 0
இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!
Sekar Babu And Veeramani

சென்னை: அறநிலையத் துறை இந்து மதத்தை பரப்புவதற்கான ஒன்றல்ல என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ பழனியில் இரண்டு நாள்கள் நடைபெற்றுள்ளது. காணொலிக் காட்சி வழியாக மாநாட்டைத் தொடங்கி வைத்து வாழ்த்தி உரையாற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

இந்து அறநிலையத் துறை என்பது கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதும், வரவு – செலவுகளை சரி பார்ப்பதுமான துறையே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான ஒன்றல்ல. பாராட்டவேண்டிய நேரத்தில் தமிழ்நாடு அரசை மனந்திறந்து பாராட்டுவது போலவே, சறுக்கல் நேரும் நேரத்தில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.

அனைத்துலக முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 8 மற்றும் 12வது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவையாகும். ''கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது'' 8வது தீர்மானம் கூறுகிறது. 

''முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று 12வது தீர்மானம் கூறுகிறது. 

இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச் சார்புடையன அல்ல! நமது தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க.  அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் – இதற்குமேல் விளக்கத் தேவையில்லை.

முதலமைச்சர் காணொலி உரையில், ''ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும்! திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும்! உலகம் ஒன்றாகும்'' என்ற ஒன்றை அழுத்தமாகக் குறிப்பி்ட்டுள்ளார். இது முத்தாய்ப்பான கொள்கை ரீதியான முத்திரையடியாகும்.

அந்த வகையில், மாநாடு நடைபெற்ற முருகன் கோவிலிலேயே தொடங்குவது பொருத்தமானதாக இருக்க முடியும். தமிழிலும் அர்ச்சனை என்ற உம்மை இழிவு சிறப்பை நீக்கி, தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ‘திராவிட மாடல்’ அரசின் மனிதத்துவ சிந்தனையை செயல்படுத்தவேண்டும். இது ஒரு கட்டத்தோடு நின்றிருக்கிறது. 

இதனை முழுமையாக நிறைவேற்றி, முதலமைச்சர் காணொலியில் குறிப்பிட்ட, கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிறைவேற்றப்படவேண்டும். இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறந்த செயல்வீரர் என்பதால், செயல்பாபு என்றே முதலமைச்சர் பாராட்டினார்.
அதைவிட இப்போது ஒன்றைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகும்.

‘‘கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்! என்று கூறியதன்மூலம், அவர் தனது துறைப் பணிகளில் தேவையான ஆர்வம் தாண்டி செய்கிறார். over enthusiastic ஆக இருக்கவேண்டாம் – கூடாது – இது ‘இடிப்பாரை' – உள்நோக்கமின்றி!

முக்கியமாக அவரைப் பாராட்ட – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் – நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும் என்று சொல்வது நமது உரிமையாகும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow