அரசியல்

சாதி சான்றிதழ் கொடுக்குறதுக்கு என்ன? - சு.வெங்கடேசன் எம்பி ஆவேசம்!

திடீர் திடீர் என்று ஒரு அதிகாரி வந்து திடீர் திடீரென்று மக்களின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

சாதி சான்றிதழ் கொடுக்குறதுக்கு என்ன? - சு.வெங்கடேசன் எம்பி ஆவேசம்!
சாதி சான்றிதழ் கொடுக்குறதுக்கு என்ன? - சு.வெங்கடேசன் எம்பி ஆவேசம்!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பழங்குடியினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு நான்கு நாட்கள் ஆக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அப்போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொடர்ந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிற பழங்குடி இன சமுதாய மக்களுக்கு சரியான போதுமான நியாயம் வழங்க பல்வேறு காலங்களால் பல்வேறு கட்டங்களாக பிரச்சனைகள் வருகிறது. 

இப்போது பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சாதி சான்றிதழ் கொடுக்க மாட்டேன் என்று மறுத்ததால் இந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது. திடீர் திடீர் என்று ஒரு அதிகாரி வந்து திடீர் திடீரென்று மக்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது. அரசுக்கென்று ஒரு கொள்கைதான் இருக்க வேண்டும். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் ஏற்கனவே குழந்தைகளின் பெற்றோர் இருவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுக்கப்பட்ட பிறகு பல வருடங்கள் கழித்து அந்தப் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுக்க மறுப்பது எந்த விதத்திலும் பொருத்தமான விஷயமாக இல்லை. 

இந்தப் பறவை பேரூராட்சியில் இந்த வார்டு எஸ்டி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு. அந்த எஸ்டி வார்டு ஆனது எஸ்டி மக்கள் கணக்கெடுப்பு எடுத்த பிறகு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பழங்குடி மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் அரசாணை அமல்படுத்தி இந்தப் பகுதி பழங்குடியின மக்கள் அதிகமாக இருக்கிற பகுதி என தீர்மானித்து, அந்த அடிப்படையில்தான் உள்ளாட்சி சட்டப்படி இந்தப் பகுதி எஸ்டி பெண்களுக்கு என இந்த வார்டு அறிவிக்கப்பட்டது. அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில் ஒட்டுமொத்தமாக சான்றிதழ் கொடுக்க மாட்டோம் என்பது பொறுப்பானதாக ஏற்புடையதாக இல்லை என மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக ஒருவர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது அதை பரிசீலனை செய்வது வேறு. ஆனால் முந்தைய தலைமுறைக்கு சான்றிதழ் வழங்கிவிட்டு அடுத்த தலைமுறைக்கு சான்றிதழ் வழங்க மறுப்பது போன தலைமுறைக்கு சான்றிதழ் கொடுத்ததும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தான் என்கிற போது அடுத்த தலைமுறைக்கு சான்றிதழ் கொடுப்பதில் மட்டும் பிரச்சனையை எழுப்புவது நியாயம் அல்ல, பொருத்தமல்ல. 

நிச்சயமாக இந்தக் கோரிக்கையில் இருக்கின்ற நியாயத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கவனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்கிறேன். ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு அளவுகோலை வைத்து இதைத் தீர்மானிக்கக் கூடாது. அரசுக்கு பொது அளவுகோல் இருக்க வேண்டும். சமவெளி பகுதியில் வசிக்கின்ற பழங்குடியின மக்களுக்கு மலைப்பகுதியிலேயே இருக்கின்ற அளவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு பொருத்தக்கூடாது. சமவெளிப்பகுதிக்கு வந்தது அன்றைய காலமும் சூழ்நிலையும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தால் நிகழ்ந்தது. அதற்காக இன்றைக்கு இருக்கும் மாணவர்களையும் தலைமுறையினர்களையும் அந்தப் பழியை தூக்கி அவர்கள் மேல் போடக்கூடாது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.