சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கவுள்ளதாக நேற்றிரவு அறிவிப்பு வெளியானது. திமுகவின் பவள விழா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வெளியான இந்த அறிவிப்பு, அக்கட்சியினரிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே இதுகுறித்த செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது முறைப்படி அறிவிப்பு வந்துவிட்டது. அதன்படி, இன்று மதியம் 3 மணிக்கு உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் உதயநிதி. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே உதயநிதியின் கைவசமுள்ள இளைஞர் நலன், விளையாட்டுத் துறையுடன்; திட்டமிடல், வளர்ச்சித் துறையும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இன்று மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியமான பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு எனக் கூறியிருந்தார். அதனை உணர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜியும் மீண்டும் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வந்துள்ள செந்தில் பாலாஜி, தொடர்ந்து அமைச்சராக பதவி வகிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதுடன், 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆவடி நாசர், சேலம் ராஜேந்திரன், கோவி செழியன் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன், தனுஷ், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன், ”துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் உறுதிமொழி எடுத்துள்ள நீங்கள், இந்த இருவருக்கும் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தனுஷும் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிதையால் வாழ்த்துத் தெரித்துள்ளார்.
உங்கள்
அன்னையைப் போலவே
நானும் மகிழ்கிறேன்
இந்த உயர்வு
பிறப்பால் வந்தது என்பதில்
கொஞ்சம் உண்மையும்
உங்கள் உழைப்பால்
வந்தது என்பதில்
நிறைய உண்மையும் இருக்கிறது
பதவி உறுதிமொழி ஏற்கும்
இந்தப் பொன்வேளையில்
காலம் உங்களுக்கு
மூன்று பெரும் பேறுகளை
வழங்கியிருக்கிறது
முதலாவது
உங்கள் இளமை
இரண்டாவது
உங்கள் ஒவ்வோர் அசைவையும்
நெறிப்படுத்தும் தலைமை
மூன்றாவது
உச்சத்தில் இருக்கும்
உங்கள் ஆட்சியின் பெருமை
இந்த மூன்று நேர்மறைகளும்
எதிர்மறை ஆகிவிடாமல்
காத்துக்கொள்ளும் வல்லமை
உங்களுக்கு வாய்த்திருக்கிறது
உங்கள் ஒவ்வோர் நகர்வும்
மக்களை முன்னிறுத்தியே
என்பதை
மக்கள் உணரச் செய்வதே
உங்கள் எதிர்காலம்
என் பாடலைப் பாடிய
ஒரு கலைஞன்
துணை முதல்வராவதை எண்ணி
என் தமிழ் காரணத்தோடு
கர்வம் கொள்கிறது
கலைஞர் வழிகாட்டுவார்
துணை முதல்வராகும் நீங்கள்
இணை முதல்வராய்
வளர வாழ்த்துகிறேன் – என பதிவிட்டுள்ளார்.
இந்த வரிசையில் அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.