அரசியல்

எடப்பாடிக்கு செக்? ஆட்டத்தைத் தொடங்கிய மாஜி? போட்டுடைத்த எதிர்க்கட்சி..!

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாபிக்.. என்ன நடக்கிறது அதிமுக-வில்? எடப்பாடி இதனை சமாளிப்பாரா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்..

எடப்பாடிக்கு செக்? ஆட்டத்தைத் தொடங்கிய மாஜி? போட்டுடைத்த எதிர்க்கட்சி..!
எடப்பாடிக்கு செக்? ஆட்டத்தைத் தொடங்கிய மாஜி? போட்டுடைத்த எதிர்க்கட்சி..!

தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுக சுயபரிசோதனை செய்துக் கொள்ள கள ஆய்வுக் குழு ஒன்றை நியமித்து கண்காணித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கெனவே நெருங்கும் தேர்தல் மற்றும் உட்கட்சி பூசல் என எடப்பாடிக்கு இரண்டு தலைவலிகள் வாட்டி வதைக்கும் நிலையில் தற்போது மூன்றாவது பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு 

அதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது, எடப்பாடியின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடுமை தலைவிரித்தாடுகிறது என்று கடும் அப்செட்டாகி கப்சிப்பாகியுள்ளார் எடப்பாடி என்று எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், உயர்நீதிமன்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டம் தொடர்பாக அவர் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்பதை முன்பே அவர் கணித்துவிட்டதால்தான் ஓபனாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

இத்தகைய சூழலில், இன்னும் பல பேர் முரண்பாடு காரணமாக அதிமுகவில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது என சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, அதிமுகவை பொறுத்தவரை எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைமை அதிமுகவில் இல்லை.. ஏற்கனவே பல கூறுகளாக பிரிந்து உள்ளது.. இபிஸிற்கும் செங்கோட்டையனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.. இன்னும் பல பேர் முரண்பாடு காரணமாக வெளியே வரலாம்... என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, அதிமுகவின் அரசியல் நிலைபாடு நிலையற்ற நிலைப்பாடு என்று கூறிய கே.பாலகிருஷ்ணன், பாஜகவுடன் ஆதரவு தெரிவித்து, பின்னர் பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்ததாக குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசுகையில், “ இதுதான் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரே சான்ஸ். இந்த சான்ஸை அவர் பயன்படுத்தி அதிமுகவையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எல்லாவற்றையும் டெல்லியே பார்த்துக் கொள்ளும். இப்படி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைமையே எடப்பாடிக்கு இருக்காது. ஆனால் அவர்தான் கூட்டணிக்கு ஒத்துழைக்கவே இல்லையே. அதனால், இதுபோன்று அடுத்தடுத்து பல அதிரடி காட்சிகளை எடப்பாடி சந்திக்க நேரிடும்” என்றனர்.

இப்படியாக, அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளை  எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.