மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டில் பல ரூபங்களில் சார்கள்- எடப்பாடி கண்டனம்

சென்னையில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Jan 27, 2025 - 19:27
 0
மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டில் பல ரூபங்களில் சார்கள்- எடப்பாடி கண்டனம்
எடப்பாடி பழனிசாமி

சென்னை பெரம்பூரை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.  அந்த புகாரில், தனியார் பள்ளியில்  9-ம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகள் காணவில்லை என தெரிவித்திருந்தார்.  புகாரின் அடிப்படையில் திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணையில் சிறுமி 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி தோழி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி தோழியுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

பின்னர் மூன்று ஆண் நண்பர்களுடன் முதலில் ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு பிறகு மீண்டும் சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகே உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி விட்டு அதே பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு பழைய கட்டிடத்தில் இரவு முழுவதும் திரு.வி.க நகர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவிகளின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவர்களை மீட்டனர்.

அந்த பாழடைந்த கட்டிடத்தில் அந்த மாணவிகளுடன் ஆண் நண்பர்கள் தனிமையில் இருந்த பொழுது  மூன்று சிறுவர்களை அழைத்து வந்து காவலுக்காக நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே இந்த வழக்கு திரு.வி.க நகர் காவல் நிலையத்திலிருந்து இருந்து, செம்பியம் அனைத்து மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது.  பின்னர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த மருத்துவ பரிசோதனை அடுத்து  மாணவிகளை காவல்துறையினர் மயிலாப்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான காப்பகத்தில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிகளை கடத்திச் சென்ற கொடுங்கையூரை சேர்ந்த கலிமுல்லா, அகரம் பகுதியை  சேர்ந்த அபிஷேக்  மற்றும் கோகுல் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் என மொத்தம் ஆறு பேரை கைது செய்தனர். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல ரூபங்களில் பல சார்கள் இருப்பதாக எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும்.

"SIR" போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow