Heavy Rain: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Aug 11, 2024 - 09:22
 0
Heavy Rain: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!
Heavy Rain In 15 Districts

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 11) முதல் 4 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 11) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை, தமிழ்நாட்டின் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் 30 - 40 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இன்று (ஆகஸ்ட் 11) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், கரூர், அரியலுார், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 

நாளை (ஆகஸ்ட் 12) கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலுார், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

ஆகஸ்ட் 13ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில், கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலுார், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையும், கன மழை வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளன.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டம் தொழுதுாரில் 14 செ.மீ மழையும், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 12 செ.மீ மழையும் கொட்டியுள்ளது'' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow