பெண்களை விடாமல் துரத்திய கார்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி
ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் துரத்திய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈசிஆர் சாலையில், கடந்த 25-ம் தேதி இரவு முட்டுக்காடு பகுதிக்கு தங்களது குடும்பத்தினருடன் காரில் சென்ற பெண்களை, இரண்டு கார்களில் பயணித்த இளைஞர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அந்த காரிகளில் ஒன்றில், திமுக கொடி இருந்ததும் பெரும் சர்ச்சையானது.
இதனை குறிப்பிட்டு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
திமுக கொடி கட்டிய வெள்ளை நிற சஃபாரி கார், கன்னியாகுமரியைச் சேர்ந்தது என்றும், மற்றொரு கார் நங்கநல்லூரைச் சேர்ந்தது எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர்.
குற்றவாளிகள் நான்கு பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை வரும் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துருவை போலீசார் வெளி மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
குற்றவாளியான சந்துரு, அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி நிலையில் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்று சந்துரு கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, சந்தோஷ் என்பவர் கூறியதால் தான் பெண்கள் வந்த காரை தான் துரத்தியதாகவும் என் அம்மாவின் உறவினர்களான மாமா, தாத்தா இருவரும் அதிமுகவில் தான் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எம்ஜிஆரின் கார் ஓட்டுநராக என் தாத்தா இருந்தார் என்றும் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், நாங்கள் கொடைக்கானல் செல்லலாம் என்று திட்டமிட்டோம். அவ்வாறு செல்லும் போது கொடி கட்டினால் சுங்க கட்டணம் கட்ட தேவையில்லை என்று கூறி கொடியை கட்ட சொன்னார்கள். ஜனவரி 10-ஆம் தேதி அந்த கொடியை காரில் போட்டோம் என்று அவர் கூறிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈசிஆர் சாலையில் பெண்களை துரத்திய விவகாரம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதாவது, பெண்கள் வந்த காரை அந்த இளைஞர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துரத்தி சென்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், பெண்கள் தப்பிக்க சென்ற போதும் அவர்கள் சாலையை வழிமறித்து நின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
What's Your Reaction?