பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனை படித்த நீதிபதிகள், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த விவகாரத்திற்கு பின்னர் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும், உயர் நீதிமன்ற கட்டடத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை போலவே உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஸ்கேனர் வைத்து அனைத்து உடைமைகளையும் பரிசோதிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் ஏற்கனவே உள்ள நுழைவு வாயில்களில் மாற்றம் செய்யாமல் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல்நல குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, வழக்கறிஞர் ஹமீது இஸ்மாயில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம் .எஸ் ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் இன்று முறையீடு செய்தார்.
அப்போது, சிறையில் இருக்கும் நாகேந்திரனுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேலூர் சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரினார்.
முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தற்போது நாகேந்திரனுக்கு சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரிய மனுவை பட்டியலிடுவது தொடர்பாக நீதிமன்ற பதிவாளரை அணுக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு பட்டியலிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.