விண்ணை பிளக்கும் விஜய் பாடல்கள்... பரபரக்கும் தேசிய நெடுஞ்சாலைகள்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாகனங்களில் விஜய்யின் பாடல்களை ஒலிக்கவிட்ட வண்ணம் சென்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது அடுத்தடுத்த நகர்வுகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.
பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். இதில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது. தொண்டர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் தவெக மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தவெக மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மாநாட்டுத் திடலை நோக்கி படையெடுத்து வருகின்றன. தென் மாவட்டங்களில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
அதேபோல், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்தந்த பகுதிகளில் இருந்து அதிகாலை வாகனங்கள் புறப்பட தொடங்கியது.
அப்போது ரசிகர்களும், தொண்டர்களும் தங்களது வாகனங்களில், தவெக தலைவர் விஜய் நடித்த படங்களில் இருந்து பாடல்களை ஒலிக்கவிட்டபடி சென்றனர். இதனால், நெடுஞ்சாலை முழுவதும் மாநாட்டு வாகனங்களில் இருந்து வெளியான விஜய் பட பாடல்கள் காதுகளை துளைத்தன. மேலும், பெரும்பாலான வாகனங்களில் இருந்தும் விஜய்யின் பாடல்கள் ஒலித்ததால், சப்தம் விண்ணைத் தொட்டன.
மாநாட்டு வாகனங்களில் பெரும்பாலும் இளைஞர்களே பயணம் செய்தது காண முடிந்தது. ரசிகர்களாக இருந்த இளைஞர்கள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்ததால் பெரும்பாலும் வெள்ளை சட்டையே அணிந்திருந்ததையும் காண முடிந்தது. தங்களது தலைவனை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் ஆடி, பாடி உற்சாகமாக சென்றனர்.
What's Your Reaction?