'3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்ட இலக்கு'... ரஷ்யாவில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!

''கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன''

Jul 9, 2024 - 13:25
Jul 9, 2024 - 13:27
 0
'3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்ட இலக்கு'... ரஷ்யாவில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியா வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி

மாஸ்கோ: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த  அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் அங்கு இருந்து நோவோ-ஓகாரியோவோவில் உள்ள ரஷ்ய அதிபரின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடியை, விளாடிமிர் புதின் கட்டித்தழுவி உற்சாகமாக வரவேற்றார்.

பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாக புகழாரம் சூட்டிய புதின், மோடிக்கு சிறப்பு இரவு விருந்தும் வழங்கினார். இன்று மோடியும், புதினும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி மாஸ்கோவில் ரஷ்யாவில் வசிக்கும் இந்தியா வம்சாவளியினரை சந்தித்து பேசினார். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த இந்தியா வம்சாவளியினர் அவர் 3வது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இந்தியா வம்சாவளியினர் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-  

இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை பார்க்க நான் தனியாக வரவில்லை. இந்திய மண்ணின் நறுமணத்தையும், 140 கோடி இந்தியர்களின் அன்பையும் என்னுடன் எடுத்து வந்துள்ளேன்.

நான் 3வது முறையாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தியா வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறேன். நாட்டின் முன்னேற்றத்துக்காக இன்னும்  அதிவேகமாக பணியாற்றுவேன். இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்றாக எனது அரசு இலக்கு வைத்துள்ளது. 

மேலும் ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை வலுப்படுத்தி, கிராமப்புறங்க பெண்களின் ஆண்டு வருமானத்தை ரூ.1 லட்சத்துக்கு மேல் உயர்த்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

இன்று இந்தியா உலக நாடுகள் யாரும் செல்லாத சந்திரனில் கால் பாதித்துள்ளது. 2014க்கு முன்பு இந்தியாவில் நுற்றுக்கணக்கான ஸ்டார்அப் நிறுவனங்களே இருந்தன. ஆனால் இன்று லட்சக்கணக்கான ஸ்டார்அப் நிறுவனங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன.

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை கட்டியும், உலகின் மிகப்பெரிய சிலையை நிறுவியும் இந்தியா சாதனை படைத்துள்ளது. எளிதான டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தியா வலுவான சுகாதாரத்துறையை கொண்டுள்ளது மட்டுமின்றி, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ்   நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகின் பல்வேறு இடங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பெருமிதம் கொள்கின்றனர். இந்தியா உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதற்கு 140 கோடி மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையே காரணம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் இந்தியா டி20 உலகக்கோப்பை வென்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, ''உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றியை நீங்களும் கொண்டாடி இருக்கிறீர்கள். கடைசி பந்து வரை, கடைசி நிமிடம் வரை போராடாமல் இந்தியா தோல்வி அடைவதை நாட்டின் இளைஞர்கள் விரும்புவதில்லை. பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வலுவான அணியை அனுப்பியுள்ளது'' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow