பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்.. டொனால்ட் டிரம்ப் புகழாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சிறந்த நண்பர் என்றும் அவர் மிகவும் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. மேலும் டிரம்பின் சில முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
டிரம்ப் புகழாரம்
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மிகச்சிறந்த நண்பர் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்தார். நாங்கள் எப்போதும் மிகவும் நல்ல நண்பர்கள்.
உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது மிகவும் மோசமானது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் புத்திசாலி. நாங்கள் சிறந்த உரையாடலை மேற்கொண்டோம். அமெரிக்கா இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை மிகச் சிறப்பாக அமையும். இந்தியாவிடம் ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார்” என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப்பின் இந்த கருத்து இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில், இந்தியா உட்பட சில நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து பரஸ்பர வரி வதிக்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் நடைப்பெறும் தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 182 கோடி ரூபாய் (21 மில்லியன் அமெரிக்க டாலர்) ரத்து செய்யப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
What's Your Reaction?






