மேலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மில்கேட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 43-ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் திருவிழாவான நேற்று (மார்ச் 28) திருவிளக்கு பூஜையும், நள்ளிரவில் அக்னிசட்டி மற்றும் அம்மன் எழுந்தருளல் செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. தொடர்ந்து, இரண்டாம் நாள் விழாவான இன்று (மார்ச் 29) காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டு வந்த ஏராளமான பக்தர்கள், மேலூர் சாலைக்கரையான் ஊரணியில் ஒன்றுக்கூடி வழிபாடு நடத்தினர்.
இதையடுத்து, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயிலுக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று மாலை (மார்ச் 29) முளைப்பாரி ஊர்வலமும், நாளை (மார்ச் 30) மூன்றாம் நாள் விழாவாக மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைய உள்ளது.
இத்திருவிழாவையொட்டி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மேலூர் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?






