ஐயப்ப பக்தர்களை சீண்டிய பாடகி இசைவாணி.. இயக்குநர் மீதும் வழக்குப்பதிவு
இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கானா பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி இசைவாணி. இவர் இயக்குநர் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்டில் இணைந்து பல்வேறு சுயதீன பாடல்களை பாடியதன் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டார். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த இசைவாணி அதிக நாட்கள் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 49 நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
மேலும், அந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மிகவும் இளம் வயது போட்டியாளராக இசைவாணி இருந்தார். தற்போது வெளிநாடு நிகழ்ச்சிகளில் பிசியாக பாடி வருகிறார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதத்திலும் மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதில் இசைவாணி ஐயப்ப பக்தர்களை சீண்டும் விதமாக, ‘ஐம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா.. நான் தாடி காரன் பேபி.. இப்போ காலம் மாறி போச்சு.. நீ தள்ளி வச்சா தீட்டா... நான் முன்னேறுவேன் மாசா’ என்ற பாடலை பாடியிருந்தார். அதாவது, கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.
இதனை விமர்சிக்கும் விதமாக இந்த பாடலை இசைவாணி பாடியுள்ளார். இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விதி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இசைவாணி இவ்வாறு பாடியிருப்பது தங்களது உணர்வுகளை, பக்தியையும் புண்படுத்தி இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து, கோவை மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கானா பாடகி இசைவாணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?