இது வாட்ஸ்அப் யுகம்! Forward மெசேஜ்களை நம்ப வேண்டாம்... முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கருணாநிதி இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றினார்.

Nov 24, 2024 - 04:20
 0
இது வாட்ஸ்அப் யுகம்! Forward மெசேஜ்களை நம்ப வேண்டாம்... முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
இது வாட்ஸ்அப் யுகம்! Forward மெசேஜ்களை நம்ப வேண்டாம்... முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ. 23)மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில் நடத்தப்பட்ட, “கலைஞர் 100 – வினாடி-வினா” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். 

தமிழ்ச் சமுதாயத்தை அடிமைப்படுத்தியவர்களையும் - தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் வினா எழுப்பியவர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி. வினா எழுப்பியதோடு இல்லாமல், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி – தமிழ்ச் சமுதாயத்திற்கான விடியலாகவும் - முன்னேற்றத்திற்கான விடையாகவும் இருந்தார் நம்முடைய தலைவர் கருணாநிதி. எனவே, கருணாநிதியின் நூற்றாண்டில் வினாடி-வினா போட்டி நடத்தி, “எங்கே திராவிடப் பட்டாளம்?” என்று கேட்பவர்களுக்கு – “இதோ இங்கே!” என்று அடையாளம் காட்டியிருக்கிறார் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி!

‘கலைஞர் 100’ மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார். தலைவரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனுடைய மரணத்தில் இருந்துதான் கணக்கிடப்பட வேண்டும்” என்று சொல்வார். அப்படி, நிறைந்த பிறகும், தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி.  

பாசத்தைப் பொழியும்போது, கனிமொழியாகவும் – தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது, கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி. நீங்கள் அனைவரும் கனிமொழியின்  நாடாளுமன்றப் பேச்சுகளைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்... திராவிட இயக்கத்தின் கொள்கையை – சமூகநீதி வரலாற்றை – சுயமரியாதை சமதர்ம உணர்வுகளோடு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகம் காக்க இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாகச் செயல்பட்டு வருபவர்தான் கனிமொழி.

மக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்... உங்களைப் போலவே பலரையும் உருவாக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது வாட்ஸ்அப் யுகம்! வாட்ஸ் அப்-இல், யாரோ ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும். அதற்கு, இதுபோன்ற போட்டிகள் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும். 

அருமைச் சகோதரி கனிமொழிக்கு நான் வைக்கும் வேண்டுகோள்... வேண்டுகோள் அல்ல, உரிமையோடு சொல்கிறேன்... இதுபோன்ற கருத்துகளை விதைக்கும் களப்பணியைத் நீங்கள் தொடர வேண்டும். கனிமொழிக்கும் அவருக்கு துணைநின்ற மகளிரணிக்கும், அனைவருக்கும் மீண்டும் மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow