Rajinikanth: பரட்டை டூ சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஸ்டைல் மன்னன் என்றென்றும் ரஜினிகாந்த்!

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” – என்ற இந்த வரிகளுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் சொந்தகாரர் ரஜினிகாந்த் மட்டுமே. 16 வயதினிலே பரட்டையாக வலம் வந்த ரஜினி, சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்தது எப்படி... இன்றும் ரஜினிக்கு ரசிகர்களிடம் இருக்கும் கிரேஸுக்கு என்ன காரணம்... வாங்க பார்க்கலாம்.....

Dec 12, 2024 - 17:42
Dec 12, 2024 - 18:02
 0
Rajinikanth: பரட்டை டூ சூப்பர் ஸ்டார்  ரசிகர்களின் ஸ்டைல் மன்னன்   என்றென்றும் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

“ஸ்டைலு ஸ்டைலு தான்.... இது சூப்பர் ஸ்டைலு தான்... இந்த ஸ்டைலுக்கேத்த ஆளு இவரு தான்”, வேற யாரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆமாங்க! சிவந்த கண்ணிரண்டிலும் சினிமா மட்டுமே தனது எதிர்காலம் என தீர்க்கமாக நம்புகிறான் சிவாஜி கெய்வாட் என்ற அந்த இளைஞன். பஸ் கண்டக்டராக சொற்ப வருமானத்தில் வேலை, ஆனாலும் தனது லட்சியத்தை தேடிய சிவாஜியின் வேட்கை குறையவே இல்லை. சிவாஜியின் லட்சியத்துக்கு நண்பர்கள் துணையிருக்க, மையம் கொண்ட புயலைப் போல, சென்னையை நோக்கி நகர்ந்தது சிவாஜி கெய்வாட் என்ற ரஜினிகாந்த். 

இவரைப் பார்த்ததும் இயக்குநர் கே பாலச்சந்தரின் ஞானக் கண்களுக்கு என்ன தான் தெரிந்ததோ? அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தை அறிமுகம் செய்த கே பாலச்சந்தர், படத்தின் தலைப்பை போல, ரஜினியின் நடிப்பையும் அபூர்வமானதாக ரசிகர்களை உணரச் செய்தார். அதுவரை எங்கேயும் எந்த நடிகரிடமும் பார்த்திடாத வசீகரமான நடிப்பு, நடையிலும் உடையிலும் செம்ம ஸ்டைல் என, ரஜினியின் தனித்துவங்களைப் பார்த்து ரசிகர்களே சிலிர்த்துப் போயினர். கூடவே இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தருக்கும் அந்த பிரமிப்பு போகவில்லை.

இந்த முதல் படியும், அடுத்தடுத்த சில ஏமாற்றங்களும் மட்டுமே ரஜினிக்கு தடை கற்கலாக அமைந்தது. இந்த தடைகளையெல்லாம், விரல் கோதி சிலிப்பி விடும் தனது சிகையலங்காரத்தைப் போல, சில்லு சில்லாக நொறுக்கினார் ரஜினிகாந்த். 16 வயதினிலே படத்தில் பரட்டையாக நடித்த போதும், ரஜினி பற்ற வைத்த ‘இது எப்படி இருக்கு’ என்ற பஞ்ச் டயலாக், தமிழ்நாட்டையே பேய் பிடித்தது போல பித்துப் பிடித்து ஆட்டியது. இவன் வெறும் பரட்டை அல்ல, இந்திய சினிமாவின் ராஜபாட்டை என்பதற்கு, இதுவே சிறந்த உதாரணமாக அமைந்தது.

இன்றளவும் ரஜினியை அவரது நடிப்புக்காக ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படம் முள்ளும் மலரும். அங்கேயும் ”கெட்ட பைய சார் இந்த காளி” என நச்சென்று பஞ்ச் வைத்தவர் சூப்பர் ஸ்டார். 1980 முதல் 90 வரையிலும் ரஜினியின் மாஸ் சம்பவங்கள், கொஞ்சம் நஞ்சமல்ல. மூன்று முகம், முரட்டு காளை, பாயும் புலி, தங்க மகன், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத் என ரஜினியின் கரியர், ஜெட் ஸ்பீடில் உச்சம் தொட்டது. 

அதேபோல், 1990 முதல் 2000ம் ஆண்டு வரையிலான சினிமா பயணத்தில், ஆல் டைம் சூப்பர் ஸ்டார் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்தார் ரஜினிகாந்த். முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்த ரஜினிக்கு, தளபதி திரைப்படம் தாறுமாறு ஹிட் கொடுத்தது. அதேவேகத்தில் வெளியான அண்ணாமலை, அதிரி புதிரியாக வெற்றிப்பெற, 1994ல் ரிலீஸான பாட்ஷா, அதுவரை இல்லாத அதி உச்சம் எனலாம். ரஜினியின் கெட்டப், கேங்ஸ்டர் லுக், ‘ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’- பஞ்ச் டயலாக், ‘பாட்ஷா தீம் மியூசிக்’ என ஆல் இன் ஆல் அன்லிமிடெட் கமர்சியல் விருந்தாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக கோலிவுட்டின் கூஸ்பம்ஸ் மூவியாக பாட்ஷாவை சொல்லலாம். 

அதேபோல், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, கபாலி, காலா, பேட்ட, ஜெயிலர், வேட்டையன், அடுத்து வரப் போகும் கூலி ஆகிய படங்களும், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மஜா விருந்து தான். ஒற்றை விரலில் ஓராயிரம் ஸ்டைல்கள், நடந்தாலும் ஸ்டைல், சிரித்தாலும் ஸ்டைல், முடியை சிலிர்த்துவிடுவதிலும் ஸ்டைலோ ஸ்டைல். நடிப்புக்காக கொண்டாடப்படும் நடிகர்கள் மத்தியில், தனது ஸ்டைலால் தமிழ்நாட்டை தாண்டி உலகம் முழுவதும் தனது கொடியை உயரே பறக்க விட்டவர். இவை எல்லாவற்றுக்கும் இந்த சினிமா உலகம் என்றென்றும் உச்சரிக்கும் பெயராக உருவெடுத்து நிற்பதே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தனித்துவம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow