Vaazhai: “நல்ல கதை… நீங்களே படிங்க..” வாழை பஞ்சாயத்து… எழுத்தாளருக்கு மாரி செல்வராஜ் பதிலடி!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

Aug 29, 2024 - 11:11
Aug 29, 2024 - 11:12
 0
Vaazhai: “நல்ல கதை… நீங்களே படிங்க..” வாழை பஞ்சாயத்து… எழுத்தாளருக்கு மாரி செல்வராஜ் பதிலடி!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் ரிலீஸான இந்தப் படம், இதுவரை 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். பள்ளிக்கூடம் படிக்கும் போது, குடும்ப வறுமை காரணமாக வாழை தார் சுமக்கும் வேலை பார்த்துள்ளார் மாரி செல்வராஜ்.

அப்போது அவரது வாழ்வில் நடந்த துயரமான சம்பவத்தின் ஒருபகுதி தான் வாழை திரைப்படம் என அவர் கூறியிருந்தார். முக்கியமாக இந்தப் படம் “எனக்கும் எனது அக்காவுக்கும் இடையேயான கதை தான்” என்றும் மாரி செல்வராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். வாழை-க்கு ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படத்தின் கதை குறித்து சர்ச்சையும் எழுந்துள்ளது. இதுகுறித்து சாகித்ய அகடாமி விருது வென்ற எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூலில் எழுதியிருந்தார். 

அதாவது, ஏராளமான நண்பர்கள் தனக்கு போன் செய்து மாரி செல்வராஜ்ஜின் வாழை படம் பாருங்கள் என கூறினார். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து  வாழை படம் பார்த்தேன். என் தம்பியும் தாய் மாமாவும் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சியில் தான் பெண் எடுத்துள்ளனர். அங்கு வாழை தொழில் தான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும்போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை. என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள் அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. 

ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை திரைப்படம் கொண்டாடப்படுகிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய எனது ‘வாழையடி’ இலக்கியமாகவே நின்றுவிட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒரு படைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி" என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்." என்னை வாழை வாழ வைக்கவில்லை” என பதிவிட்டு இருந்தார். 

எழுத்தாளர் சோ தர்மனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், வாழை படத்தின் கதை குறித்து, எழுத்தாளர் சோ தர்மன் சொல்வது தான் உண்மையா?. இதுபற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் கொடுப்பாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவந்தனர். அதேநேரம் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்துக்கும், சோ தர்மன் எழுதிய வாழையடி கதைக்கும் சம்பந்தமே கிடையாது என எழுத்தாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். 

மேலும் படிக்க - நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ” வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி!” என சிம்பிளாக முடித்துவிட்டார். இதன்மூலம் வாழை படத்துக்கும் வாழையடி சிறுகதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாக மாரி செல்வராஜ்ஜின் பதிவு அமைந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow