சென்னையில் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பிராங்க் வீடியோ.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பது போல, மீண்டும் சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டகிராமில் வெளியான Prank வீடியோவிற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பொது இடங்களில் Prank வீடியோ எடுப்பதற்கு தமிழக காவல்துறை தடைவிதித்தது. பிரபலமான சில யூடியூப் சேனல்கள், Prank வீடியோ மிகவும் வைரலானது. இதனைத்தொடர்ந்து பலரும் Prank வீடியோவில் ஆர்வம் காட்டினர். குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ-டியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வந்தனர்.
சென்னையில் பொதுமக்கள் அதிகமாக வரக்கூடிய இடங்களில் பொதுமக்களுக்கு தெரியாமல் குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து அவர்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்ஸ்களை பெறுவது வழக்கமாகக் கொண்டிருந்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் Prank வீடியோ செய்யப்பட்டதால், கண்டனங்கள் கிளம்பி பொது இடங்களில் பிராங்க் வீடியோ செய்ய தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பிராங்க் வீடியோக்களால் சிலர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றது.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்களை செய்த நபரை கைது செய்தும், பல பிராங்க் வீடியோக்களின் சமூக வலைதள பக்கமும் முடக்கப்பட்டது. சில நாட்கள் பிராங்க் வீடியோக்கள் இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலான பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
ஓட்டேரி பிராங்க் என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிராங்க் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், சாலையில் பணியாற்றி வரும் பொது மக்களுக்கு அருகில் சென்று வெடிகுண்டை வைப்பது போல பேக்கை வீசிவிட்டு ஒருவர் ஓடிவிடுகிறார். அதை பார்த்து பொதுமக்கள் பயந்து ஓடுவதை பிராங்க் வீடியோக்களாக பதிவு செய்து வெளியிடுவதும், சாலையில் நிற்போரை கடத்துவது போலவும், ஊசி செலுத்துவது போலவும் என தொடர்ச்சியாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்கள் ப்கிரப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் இந்த பிராங்க் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவை பதிவிட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?