குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய பலர் பெரிய நடிகைகளாக மாற வேண்டும், பல விருதுகளை வென்று குவிக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கி, அரசியல் ஆளுமையாக வளம் வந்தவர் தான் ஜெயலலிதா. 1972.. தமிழ்நாட்டின் பிரதான கட்சியாக விலங்கிய திமுகவில் இருந்து பிரிந்து வந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் எம்.ஜி.ஆர். ஆரம்பக்காலத்தில் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் கதாநாயாகியாக நடித்தவர்தான் ஜெயலலிதா. இவர் 1982ம் ஆண்டில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கட்சியில் இணைந்த அடுத்த ஆண்டிலேயே அப்போதைய திருப்பூர் தொகுதி எம்.எல்.ஏ மதிமாறன் வகித்த கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது. கட்சிக்கென தீயாக பல பிரச்சாரங்களை மேற்கொண்ட ஜெயலலிதாவின் ஆங்கில புலமையை பார்த்த எம்.ஜி.ஆர், அவரை 1984 ஆம் ஆண்டில் ராஜ்சபா எம்.பி ஆக்கினார். தன்னுடைய மொழி வலமையாலும், கணீர் குரலாலும் நாடாளுமன்றத்தையே கவர்ந்தார் ஜெயலலிதா. நாடாளுமன்றத்தில் அண்ணாதுரை அமர்ந்திருந்த 185வது இருக்கை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. நாளுக்கு நாள் கட்சிக்குள் அவருக்கான மவுசு கூடிக்கொண்டே போனதை கவனித்த சிலர் அவரை கட்சியில் இருந்து அடித்து விரட்ட போடாத திட்டங்களே இல்லை என்று கூரலாம்...
1986ம் ஆண்டு மதுரையில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாடு நடக்க அதில் எம்.ஜி.ஆருக்கு வெள்ளி செங்கோலை கொடுத்து அடுத்த அரசியல் வாரிசு தான் தான் என ஜெயலலிதா காட்டியது அனைவரையும் வாய்யடைக்கச் செய்தது.
இதனையடுத்து 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களை சமாளித்து 1989 ஆம் ஆண்டில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த ஜெயலலிதா இரண்டாக பிரிந்த அதிமுக-வை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தை மீட்டது, அதிமுகவின் பொதுச்செயலாளரானது என பல விஷயங்களை செய்து முடித்தார் ஜெ.
இதனையடுத்து தான் 1989ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் வரலாறு காணாத கலவரம் ஒன்று நடந்தது. இந்த களேபரத்தின் போது தான் தாக்கப்பட்டதாக பேரவையில் இருந்து வெளியே வந்து பேட்டியளித்த ஜெயலலிதா, முதல்வரான பிறகு தான் சட்டசபைக்கு திரும்புவேன் அதுவரை சபைநடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என்று சூளுரைத்தார் ஜெயலலிதா. அவர் சொன்னது போலவே, 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று மீண்டும் சட்டசபைக்குள் மாஸ் எண்ட்ரீ கொடுத்தார் ஜெ.
இந்த நொடியில் தான் ஜெ-க்கான மவுசு அதிமுகவில் மேலும் உயர்ந்தது. இதனையடுத்து வளர்ப்பு மகன் திருமணம், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, சொத்துகுவிப்பு வழக்கு, 1996ல் தேர்தலில் தோல்வி என பல விஷயங்கள் ஜெயலலிதாவின் காலில் பாம்பாக சுற்றியது. ஆனால் பல அடிகள் விழுந்தும் போராட்ட குணத்தை மட்டும் ஜெயலலிதா கைவிடவில்லை. ஒருபுரம் சட்ட நடவடிகைகள் அவர் மீது பாய்ந்தாலும், அதையே அவருக்கு சாதகமாக பயன்படுத்தி, பிரச்சாரங்களை நடத்தி, கூட்டணிகளை அமைத்து பல யுக்திகளை கையாண்டு 2001ம் ஆண்டில் மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறினார். டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக ஓபிஎஸ்-ஐ முதல்வராக்கி, பிறகு சட்ட ரீதியாக பிரச்சனைகளை கையாண்டு மீண்டும் 2002ம் ஆண்டில் முதல்வாரானார் ஜெயலலிதா.
இதன் பிறகும் ஜெ.வின் அரசியல் பயணம் கரடுமுரடாகவே இருந்தது. மீண்டும் 2006 தேர்தலில் தோல்வியை சந்தித்தது அதிமுக. இதனால் சற்றும் துவண்டுபோகாத ஜெயலலிதா, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகைவை அரியணைக்கு ஏற்றினார். மீண்டும் அடுத்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளை கைபற்றி வெற்றிபெற, “ அரசியல் களத்தில் எதிரிகளை காணவில்லை” என தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் தோரணையாக பேசியதை யாராலும் மறக்க இயலாது.
மாநிலத்தில் மட்டும் இல்லாமல், மத்தியிலும் டஃப் கொடுத்தவர் தான் ஜெயலலிதா... 2014ல் நாடே மோடி அலையில் இருந்தது. அப்போது மோடி அலை எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ”மோடி அல்ல இந்த லேடி தான்” என தைரியமாக முழக்கமிட்டவர் ஜெ. இவரது இந்த தைரியத்தால், பாஜகவே ஜெயலலிதாவுடன் அனுசரித்துப் போகும் நிலையில் தான் இருந்தது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் எதையும் ஜெயலலிதாவை மீறி மத்திய அரசு மாநிலத்திற்குள் கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை. உதாரணமாக நீட் தேர்வை ஜெயலலிதா இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மத்தியில் யார், ஆட்சி செய்தாலும் சமரசமில்லாமல் எதிர்த்தார் ஜெயலலிதா. இவர் முன் மத்திய அரசே கைகட்டி நின்றுக்கொண்டிருந்தது என்று சொன்னால் மிகையாகது.
7 முறை பொதுச்செயலாளராக தேர்வானது, சாகும் வரை முதலமைச்சராக இருந்தது, எம்.ஜி.ஆரை விட அதிகமாக கட்சிக்கு பெருமையை சேர்த்ததாக புகழப்டார் ஜெயலலிதா. அரசியல் களத்தை தனக்கான களமாக மாற்றி தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணியாக கருத்தப்படும் ஜெயலலிதாவின் பயணம் ஓய்ந்திருக்கலாம், ஆனால் அவரது போராட்ட குணம் என்றென்றும் பேசப்படும்...!