மோகன் பாபு சொத்து பிரச்சனை.. ரூ.500 கோடி அபகரிப்பா? 2வது மனைவியின் மகனுடன் சண்டை..
நடிகர் மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன் மனோஜுக்கும் நடக்கும் சொத்து பிரச்சனை ஹைதராபாத்தையே பரபரப்பாக்கியுள்ளது. சொத்துக்காக ரவுடிகள் வைத்து மிரட்டுகிறார் என தந்தையும் மகனும் மாறி மாறி புகாரளித்துள்ள சம்பவத்தை பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தெலுங்கு திரையுலகில் இருக்கும் முக்கிய வில்லன்களில் ஒருவர் தான் மோகன் பாபு. அல்லூரி சீதாராம ராஜு, சொர்க்கம் நரகம், கோரந்த தீபம் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மிகுந்த பாராட்டை பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் மோகன் பாபு. 1979ம் ஆண்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் நடித்திருந்தார் மோகன். 2020ம் ஆண்டில் தமிழில் சூரியாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் ராணூவ அதிகாரியாக நடித்திருந்தார் மோகன். 2007 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
இவர் வித்யா தேவி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஷ்ணு என்ற ஒரு மகனும், லக்ஷ்மி என்ற ஒரு மகளும் பிறந்தனர். வித்யா தேவி மறைவுக்கு பின்னர், அவருடைய தங்கையான நிர்மலா தேவியை மணந்தார் மோகன் பாபு. இருவருக்கும் மனோஜ் மஞ்சு என்ற ஒரு மகன் பிறந்தார். வளமான பொருளாதார பின்னணி கொண்ட நடிகர் மோகன் பாபு ஸ்ரீ லக்ஷ்மி பிரசன்னா பிக்சர்ஸ், 24 Frames Factory, Manchu Entertainment ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார் . இவரிடம் பல சொகுசு கார்களும் உள்ளது. இவரது சொத்து மதிப்பு 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இரண்டாவது மனைவி மகன் மனோஜ் மஞ்சுவுக்கு, மோகன் பாபுவுக்கும் சொத்து பிரச்சனை பல நாட்களாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், டிசம்பர் 8ம் தேதி சுமார் 10 பேர் தன்னையும், தன்னுடைய மனைவியையும் தாக்கியதாக, காயங்களுடன் சென்று போலீசில் புகாரளித்துள்ளார் மனோஜ். ஆனால் இந்த புகாரில் அவர் தன்னுடைய தந்தை மோகன் பாபுவின் பெயரை குறிப்பிடவில்லை.
இதனையடுத்து, டிசம்பர் 9ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் தானும் ஒரு புகாரளித்தார் மோகன் பாபு. அந்த புகாரில், தன்னுடைய மகன் மனோஜிடம் இருந்து தன்னையும் தன்னுடைய சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும், மகன் மோஜும் மருமகள் மௌனிகாவும் (mounika) 30க்கும் மேற்பட்டவர்களுடன் வந்து மிரட்டி தன்னுடைய வீட்டை அபகரிக்க முயன்றதாகவும் மோகன்பாபு கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் மனோஜ் மறுப்பு தெரிவித்திருந்தாலும், மோகன் பாபு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவியதால், மோகன் பாபு வீட்டுக்கு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த மோகன் பாபு, ஆத்திரம் அடைந்து மைக்கை தூக்கி எறிந்து பத்தியாளர்களை தாக்கினார்.
இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள் மோகன் பாபு மன்னிப்பு கோர வேண்டும் என கண்டன முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து செய்தியாரள்களை மோகன் பாபு தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதனால் ஒரு குடும்பத்தின் சொத்து பிரச்சனை இப்போது ஊர் பிரச்சனையாகி ஹைதரபாத்தையே பரபரப்பாக்கியுள்ளது.
What's Your Reaction?