Air Show 2024: வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு... காரணத்தை கண்டுபிடித்த திருமாவளவன்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Oct 7, 2024 - 19:13
Oct 7, 2024 - 19:47
 0
Air Show 2024: வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு... காரணத்தை கண்டுபிடித்த திருமாவளவன்!
திருமாவளவன் அறிக்கை

சென்னை: இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்தனர். சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மெரினாவை நோக்கி மக்கள் படையெடுத்ததால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விமான சாகச நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். 

5 பேர் உயிரிழந்த சம்பவத்தில், திமுக அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்ததோடு, கடும் விமர்சனம் செய்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 பேர் உயிரிழப்புக்கு வெயிலின் தாக்கம் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தலைநகர் தில்லியில் மட்டுமே நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் இது நடைபெற்றது. இந்தாண்டு தமிழ்நாட்டில் மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் இலட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர்.

இந்நிலையில் தான். ஐந்து பேர், பலியாகும் அவலம் நடந்துள்ளது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத்தெரிய வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow