சொன்னதை செய்த அண்ணாமலை.. சாட்டையால் அடித்து போராட்டம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்குள் அந்நபர் எப்படி சென்றார்? பல்கலைக்கழக சிசிடிவி கேமராக்கள் செயல்படாததன் காரணம் என்ன? என பல கேள்விகளை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்தனர். தொடர்ந்து, அதிமுக, பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழக வாயில் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, கோவையில் நேற்று (டிச. 27) செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கண்டித்து பாஜக-வினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள்.
கோவையில் உள்ள எனது வீட்டின் முன்பு ஆறுமுறை சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ள போகிறேன். திமுக- வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதில் இருந்து செருப்பு அணிய மாட்டேன் என உறுதி ஏற்கிறேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து திமுக-விற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். இவர் சாட்டையால் அடிக்கும் போது தொண்டர்கள் ‘வெற்றிவேல் வீர வேல்’ என கோஷமிட்டனர். சில சாட்டையடிக்கு பிறகு தொண்டர்கள் அண்ணாமலையை கட்டியணைத்து தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நமது நாட்டிற்கு வகுத்து கொடுத்த பொருளாதார கொள்கையை எப்போதும் நினைவு கூறுவோம். நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த போராட்டம் வருகின்ற நாட்களில் இன்னும் தீவிர படுத்தபடும். தனிமனிதனை சார்ந்தோ அல்லது தனி மனிதருக்கு ஆட்சியாளர் மீதுள்ள கோபத்தை காட்டவோ இந்தப் போராட்டம் கிடையாது.
அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வந்து கொண்டிருக்கிறது. போராக இருந்தால் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது தமிழின் மரபு. பெண்கள் மற்றும் குழந்தைகள், தாயார்கள் மீது தொடுக்கபடக்கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை சாட்டையடியாக சமர்ப்பிக்கின்றோம். விரதம் இருக்கப்போகின்றோம். ஆண்டவரிடம் முறையிட போகின்றோம். எல்லா மேடைகளிலும் திமுகவை தோலுரித்து காட்டப் போகின்றோம். மூன்று ஆண்டுகளில் தமிழகத்தை எவ்வளவு பின்னால் கொண்டு போய் உள்ளது என்பதை பற்றி பேசப்போகின்றோம்.
இந்த பாலியல் நிகழ்வு பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.நன்றாக யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். திமுக ஆட்சியில் இருந்து நகரும் வரை காலணியை நான் அணிய மாட்டேன். அணியப் போவதில்லை. இது ஒரு வேள்வியாக தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்கிறேன் என்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்ததால் இன்று நடத்தப்பட இருந்த போராட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?