சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்.. வைத்திலிங்கம் மீது பாய்ந்தது லஞ்ச வழக்கு

27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Sep 21, 2024 - 11:12
Sep 21, 2024 - 11:20
 0
சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்.. வைத்திலிங்கம் மீது பாய்ந்தது லஞ்ச வழக்கு
வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதற்கட்ட விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் ரூ.27.90 கோடி பணத்தை திட்ட அனுமதி வழங்குவதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் வீட்டு வசதி துறை அமைச்சராகவும் இருந்தார். தற்போதும் அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், ரமேஷ் என்பவர் இயக்குனராக இருந்து செயல்பட்டு வரும் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் இன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு மற்றும் சண்முக பிரபு மற்றும் உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குனர்களாக சேர்ந்து முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளனர்.

அதிமுக அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ஸ்ரீராம் குரூப் நிறுவனத்திடம் தொழில் நடவடிக்கை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் இன்ஃபாஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் ஐடி நிறுவனங்கள் கட்டுமானம் செய்து ஐடி நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும் தொழிலையும் மேற்கொண்டு வந்தது. அந்த அடிப்படையில் 2013ஆம் ஆண்டு பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் 57.94 ஏக்கரில் சிஎம்டிஏ-வில் 1453 கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகவும் குடியிருப்பு மற்றும் ஐடி நிறுவன கட்டிடம் கட்டுவதற்காகவும் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தது.

மூன்று வருடமாக சிஎம்டிஏவில் திட்ட அனுமதி வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த கட்டுமானத்திற்கு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.27.90 கோடி லஞ்சமாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது. நேரடியாக பெற்றால் சர்ச்சையாக விடும் என்ற அடிப்படையில் தனது மகன் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனம் மூலமாக வாங்கியது தெரியவந்துள்ளது.

மகன்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் 2015 முதல் 16 மற்றும் 2016 முதல் 17 ஆகிய நிதியாண்டுகளில் எந்தவித தொழில் வருவாயும் ஈட்டவில்லை என்பது வருமான வரி தாக்கல் மூலமாக தெரியவந்துள்ளது. ஆனால் 2015-16 ஆண்டு காலகட்டத்தில் ஸ்ரீராம் குழும நிறுவனம் பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக கம்பெனி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தது. பாரத் கோல் கெமிக்கல் நிறுவனம் நிறுவனம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் குமார் ரூ.27.90 கோடி அளவிலான பணம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் ஆகிய காலகட்டத்தில் எட்டே நாட்களில் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது. இந்தப் பணம் பாரத் போல் கெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்து முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்குகள் காட்டியுள்ளனர்.

ஆனால் இந்த காலகட்டத்தில் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது எந்தவித தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. போலியான நிறுவனமாக  லஞ்சப்பணத்தை கை மாற்றுவதற்காக அமைச்சர் இந்த நிறுவனத்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் திருச்சி பாப்பகுறிச்சி கிராமத்தில் ரூ.18 கோடி அளவிற்கு பணம் செலுத்தி நிலத்தை  2016ஆம் ஆண்டு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ரீராம் குழுமமானது, பாரத் ஸ்கூல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்திற்கு ரூ.27.90 கோடி கொடுத்த பிறகே, இந்த நிலத்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக 2019ஆம் ஆண்டு ரூ.22.68 கோடி அளவிற்கு இந்த நிலத்தை வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும் 2014-15 முதல் 2019-20 வரை எஸ்டேட் நிறுவனம் எந்தவித பொருளாதார நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் திடீரென 2016ஆம் ஆண்டு ரூ.27.90 கோடி பண பரிவர்த்தனை நடத்தி இருப்பதாக காட்டியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின் லஞ்சம் பணம் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீராம் குழுமத்துடன் இணைந்து செயல்படும் 3 நிறுவனங்களும் மூலமாக முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்திற்கு, ரூ.2 கோடியே 24 லட்சம் மற்றும் ரூ.63 லட்சம் ஆகிய பணத்தை முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்திற்கு பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார ரீதியாக எந்த நடவடிக்கையும் இல்லாத இந்த 3 நிறுவனங்களையும் ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் லஞ்சப் பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக பயன்படுத்திக் கொண்டது தெரியவந்துள்ளது.

இதுபோன்று நிறுவனங்களின் ஆவணங்கள் அனைத்தும் சிஎம்டிஏ தலைவராகவும் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்திற்கு எதிராக லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்துவதன் அடிப்படையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து லஞ்சம் கொடுத்த ஸ்ரீராம் குழும நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் ரமேஷ், லஞ்சம் வாங்கிய முன்னால் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், அதற்கு உடந்தையாக இருந்த பாரத் கோல் பிரைவேட் லிமிடெட், அபிநயா ப்ராஜெக்ட் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், சாஸ்வதா ரெனிவல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் விநியோக டிஸ்ட்ரிபியூஷன் சர்வீஸ் லிமிடெட் மற்றும் அமைச்சரின் 2 மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு மற்றும் உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குனர்கள் பெயரிலும் அவர்கள் நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் என 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனரா என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow