தமிழ்நாடு

3 ரவுண்டு போலீஸ் துப்பாக்கி சூடு.. பிரபல ரவுடி ஆல்வின் மீது குண்டு பாய்ந்து படுகாயம்

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

3 ரவுண்டு போலீஸ் துப்பாக்கி சூடு.. பிரபல ரவுடி ஆல்வின் மீது குண்டு பாய்ந்து படுகாயம்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி ஆல்வின்

கோவை கொலை வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி ஆல்வினை, இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார், அவரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ரவுடி  சத்திய பாண்டி, கோவையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ரவுடி ஆல்வின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்திருந்த ஆல்வின், கடந்த இரண்டு மாதங்களாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆல்வினை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியானை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொடிசியா அருகே ஆல்வின் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சென்ற பொழுது, அவர்கள் மீது கத்தியால் ரவுடி ஆல்வின் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் கையில் காயம் அடைந்தார்.

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், ஆல்வினின் மீது துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயம் அடைந்த ஆல்வினை, அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சைக்காக  கோவை  அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் ஆல்வினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதே போல காயமடைந்த காவலர் ராஜ்குமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் ராஜ்குமாரை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறித்தார்.

பின்னர் பேட்டியளித்த துணை ஆணையர் ஸ்டாலின், காயமடைந்த காவலர் ராஜ்குமார் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ரவுடி ஆல்வின் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். கோவையில் அதிகாலை நேரத்தில் பிரபல ரவுடி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.