விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை வழியனுப்ப அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள ஆகியோர் வருகை தந்தனர்.
தமிழக முதல்வரை வழியனுப்ப வருகை தந்த, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு உள்ளே சென்ற பின்னர், விமான நிலையத்தில் உள்ளே சென்றார்.
பயணிகள் தவிர்த்து பயணிகளின் உறவினர்கள் யாராக இருந்தாலும், மதுரை விமான நிலையத்தில் உள்ளே செல்வதற்கு நுழைவாயில் கட்டணம் செலுத்தி உள்ளே செல்ல வேண்டும் என்பதே வழக்கம்.
இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முதலமைச்சர் சென்ற பின், விமான நிலையம் உள்ளே வந்த தனது ஆதரவாளரை உள்ளே விடும்படி கூறியுள்ளார். அப்போது, விமான நிலைய நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால், அதிகாரிகளுடன் திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சமாதானம் செய்த பின் அங்கிருந்து சென்றார்.
நுழைவாயில் கட்டணம் செலுத்தி உள்ளே செல்ல அனுமதி சீட்டு பெறாமல், தனது ஆதிக்கத்தால் சாப்பாடு கொண்டு வந்த தனது ஆதரவாளரை உள்ளே விடாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மதுரை விமான நிலையத்தில்சலசலப்பை ஏற்படுத்தியது.