பூந்தமல்லி மெட்ரோ பணி.. கட்டுமான கம்பிகள் சாலையில் விழும் அபாயம்..!
பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் தூணில் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் தூணில் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கம்பிகள், சாலையில் செல்லும் வாகனம் மீது விழும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் பதற்றத்துடன் சாலையை கடந்து வருகின்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தூரத்தை குறைவான நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட காலம் முதலே சென்னை மக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் - பூவிருந்தவல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் போருர் முதல் பூவிருந்தவல்லி தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறது.இதில் காட்டுப்பாக்கம் பூவிருந்தவல்லி இடையே 4 சாலை சந்திப்பில் 30 அடிக்கும் மேல் ராட்த தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதில் பாதி அளவில் தூண்களுக்கான கம்பிகள் கட்டப்பட்டு உள்ளது.நீண்ட நாட்களாக கம்பிகள் மட்டும் கட்டப்பட்டு அதில் கட்டுவேலை செய்யாததால் அதிக பாரம் தாங்காமல் ஒருபுறம் சாய்ந்து தொங்கி கொண்டு இருக்கிறது.இதனால் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?