மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருகிறது.. கோவி.செழியன்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயலாளர், பதிவாளர், பேராசியர்களுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவி. செழியன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் எதிர்பாராத துரதிஷ்டவசமான சம்பவம். மாணவர்களின் நலன் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறையுடன் உள்ளார். தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து திருச்சி, கோவை, மதுரை, சென்னை ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியருடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு திறந்தவெளி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மாணவியிடம் புகார் பெறப்பட்ட குறுகிய நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவை வழங்கும். மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. ஒன்றும் கிடைக்காதவர்களுக்கான அரசியல் தீனிக்கு பாதிக்கப்பட்ட மாணவியின் விவகாரத்தை பலியாக்க நாங்கள் விரும்பவில்லை. குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் தினமும் வந்து போகும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவருடைய மனைவி இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. வரும் நாட்களில் உரிய பதிவு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வருவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அது குறித்து விசாரிக்க ரகசிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் மூலம் மாணவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போஷ் கமிட்டியை காரணம் காட்டி நாங்கள் நழுவவில்லை. முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் சம்பவத்தை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனவரி இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கான முழு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
What's Your Reaction?