மலையை காத்த காவலன்.. 'மக்கள் போராளி' அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் காலமானார்.. யார் இவர்?
Madurai Arittapatti Ravichandran Passed Away : சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் சிறந்து விளங்கிய அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், அந்த கலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். இது மட்டுமின்றி நாட்டு மீன்களின் வகைகள், மீனவ மக்களின் மரபார்ந்த மீன்பிடித் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆர்வமுடன் ஆய்வு செய்துள்ளார்.
Madurai Arittapatti Ravichandran Passed Away: தமிழ்நாடு அரசின் பசுமையாளர் விருது பெற்ற 'அரிட்டாபட்டி' ரவிச்சந்திரன் இன்று மரணம் அடைந்தார். நேற்று தனது வீட்டில் இருந்த இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மக்கள் போராளி என்று கூறப்படும் அரிட்டாபட்டி ரவிச்சந்திரனின் மறைவு மதுரை மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.யார் இந்த அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்? இவர் மக்களின் அளப்பரிய அன்பை பெற காரணம் என்ன? என்பது குறித்து இப்போது காண்போம். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன். 44 வயதான இவர் இயல்பிலேயே இயற்கை மீது அதிகம் நாட்டம் கொண்டவர்.
'காடுகள், மலைத்தொடர்களை உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்' என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி மலைத் தொடர் பிரபலமான தனியார் நிறுவனத்தால் கிரானைட் குவாரிகளாக மாற்றப்பட்டது.
இதன்பின்பு அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டார். ஆம்.. அரிட்டாபட்டி மலைத்தொடர் கிரானைட் குவாரிகளாக மாறியபோது, இதை கைவிட வேண்டும் என்று அரிட்டாபட்டி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து, தலைமையேற்று பல்வேறுகட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர் அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்.
'அரிட்டாபட்டி மலைத் தொடரை கிரானைட் குவாரிகளாக மாற்றுவதை கைவிட வேண்டும்' என்று மக்களை திரட்டி கோரிக்கை விடுத்து வந்த இவர், நீதிமன்றம் வரை சென்று அரிட்டாபட்டி மலைகளை உடைக்கும் தனியார் குவாரிக்கு தடை ஆணை பெற்றார்.
தொடர்ந்து 'ஏழுமலை பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் அரிட்டாபட்டி மலைகளை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அரிட்டாபட்டி மலை குறித்து அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்த அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், அங்கு பறவைகள், அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளதாகவும், சமணர் படுகை, தமிழிக் கல்வெட்டு, ஆனைகொண்டான் கண்மாய் மடை கல்வெட்டுகள் இருப்பதாகவும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமின்றி வெளியுலகத்துக்கும் அறியச் செய்தார்.
சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் சிறந்து விளங்கிய அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், அந்த கலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். இது மட்டுமின்றி நாட்டு மீன்களின் வகைகள், மீனவ மக்களின் மரபார்ந்த மீன்பிடித் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆர்வமுடன் ஆய்வு செய்துள்ளார்.
அரிட்டாபட்டி மலையில் உள்ள பறவைகள் குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பசுமையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் வென்றுள்ள அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்வார்.
What's Your Reaction?