டாஸ்மாக் கடைகளில் 'க்யூ ஆர்' கோடு... குஷியான குடிமகன்கள்... !
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், 'க்யூ ஆர்' கோடு வசதி மூலம் மது விற்பனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு 10 முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்துவது, கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சரியான விலைக்கு மதுவை விற்பனை செய்ய, டாஸ்மாக் கடைகளை நவீன மயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ளது.
தற்போது, உற்பத்தி முதல் விற்பனை வரை என்ற திட்டத்தை, டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி, உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள் மீது விற்பனை விலையுடன் கூடிய 'க்யூஆர்' கோடு ஒட்டப்படவுள்ளது. அந்த பாட்டில்களை தொழிற்சாலையை விட்டு வெளியே கொண்டு வருவது முதல், விற்பனை வரை கண்காணிக்கப்படுகிறது. இதனால், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பது தவிர்க்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
'க்யூஆர்' குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனை வழியாக பணம் செலுத்தி, மதுபானங்களுக்கு பில் பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் இந்த வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்திலும், நவம்பர் 30 முதல் டாஸ்மாக் கடைகளில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 87 டாஸ்மாக் கடைகளுக்கும், இரண்டு நாட்களாக, 'க்யூ-ஆர்' கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், "க்யூ ஆர்" கோடு குறியீட்டை ஸ்கேன் செய்து விற்பனை செய்யும் முறையின் மூலமாக, கூடுதல் பணம் வசூலிப்பதை தவிர்க்க முடியும் எனவும், கரூரில் 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?