நீங்கள் சொன்னீர்களா?.. ஒவ்வொரு பெயரையும் சொல்லமுடியாது - நிர்மலா சீதாராமன் பதில்

ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொன்னார்களா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Jul 24, 2024 - 12:32
Jul 24, 2024 - 12:58
 0
நீங்கள் சொன்னீர்களா?.. ஒவ்வொரு பெயரையும் சொல்லமுடியாது - நிர்மலா சீதாராமன் பதில்

கடந்த 2019-ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், அப்போது தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று (ஜூலை 23) ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளார்.

திருக்குறள், புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் இருந்து பாடல்களை மேற்கோள்காட்டி தமது பட்ஜெட் உரையை தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று பட்ஜெட் தாக்கலின்போது எதையும் மேற்கோள் காட்டாமல் பட்ஜெட் உரையை வாசித்தார்.

மேலும், பட்ஜெட் உரையில் தமிழ் அல்லது தமிழ்நாடு என்ற பெயர்களை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். தவிர, தமிழக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தன.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தின் தேவைகளை முன்பே மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தோம். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்பட வில்லை. மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை. நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்க போகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், “இது பீஹார், ஆந்திராவுக்கான பட்ஜெட். தமிழ்நாடு என்ற வார்த்தையே அவர் வாயில் இருந்து வரவில்லை, திருக்குறளும் சொல்லவில்லை” என்று கூறியிருந்தார். அதேபோல, “மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது! தமிழகத்திற்கு எந்த விதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதற்கு முன்னதாக, பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்ததாக கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்கள் ஆட்சியில் இருந்தது. அவர்கள் பல்வேறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு பட்ஜெட்டிலும், இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் குறிப்பிட்டு சொல்வதற்கு, வாய்ப்பு கிடைக்காது என்பதை அவர்கள் தெளிவாக அறிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடப்படவில்லை என்றால், இந்திய அரசின் திட்டங்கள், இந்திய அரசின் செயல்முறைகள், உதவிகள் அனைத்தும் இதர மாநிலங்களுக்குச் செல்வதில்லை என்று அர்த்தமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “காங்கிரஸ் கட்சிக்கு நான் சவால் விடுவேன், அவர்களின் ஒவ்வொரு பட்ஜெட் உரையிலும், அவர்கள் இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்களா? இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு” என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow