அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?.. ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மாதபி புரி புச் முழுமையாக மறுத்துள்ளார். ''எங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

Aug 11, 2024 - 08:47
 0
அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?.. ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!
Sebi Chief Madhabi

டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் பெரு நிறுவனங்களில் நடக்கும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிண்டன்பர்க் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது. 

 ''அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் முறைகேடு செய்து பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன்கள் பெற்று வருகிறது.மேலும் போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றன'' என்று ஹிண்டன்பர்க் அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தது. ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதானி குழும நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. 

ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை முற்றிலும் தவறானது; உண்மைக்கு புறம்பானது என்று அதானி குழும நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்து இருந்தன. அதானி குழும நிறுவனங்கள் மீதான புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கெளதம் அதானியை கதிகலங்க வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம், ''இந்தியாவில் விரைவில் ஒரு சம்பவம் நடைபெற உள்ளது'' என்று நேற்று காலை 'எக்ஸ்' தளத்தில் கூறியிருந்தது. இதனால் இந்தியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் அனைத்தும் அச்சத்தில் உறைந்து இருந்தன. இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களின் முறைகேட்டில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு இருப்பதாக நேற்று இரவு ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளது.

இது தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், ''கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடியில் அதானி குழும நிறுவனங்கள் ஈடுபட்டதாக கடந்த 18 மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தோம். குறிப்பாக மொரிஷியஸில் இயங்கி வரும் போலி நிறுவனம் பில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக அம்பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அதானி குழுமம் மோசடியில் ஈடுபடதற்கான ஆதாரம் இருந்தபோதிலும்,  இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' அதானி குழும நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் எங்களை நேரில் ஆஜராகக்கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'செபி' எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதானி குழுமம் மீது நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளை பொறுப்பற்றது என்றும் 'செபி' கூறியிருந்தது. 

அதானி குழுமம் மீது 'செபி' விசாரணை நடத்தாதற்கு, அந்த குழுமத்துடன் 'செபி' அமைப்பின் தலைவர் மாதபி   புச்சுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்பு வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், மொரிஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் அதானியின் சகோதரர் வினோத் அதானி மோசடி செய்த போலி நிறுவனத்தில் 'செபி'யின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சும் பங்குகளை வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது இருவரும் மேற்கண்ட நிறுவனத்தில் கடந்த 2015ம் ஆண்டு பங்குகள் பெறக்கூடிய IPE Plus Fund என்ற கணக்கை தொடங்கியுள்ளனர். மாதபி புரி புச்சும், தவால் புச்சும் தாங்கள் பெற்ற சம்பளத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வருவதும், புச்சு தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்று விசில்ப்ளோவரின் ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன'' என்று ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறியுள்ளது.

அதானி குழுமத்துடன் மாதபி புச் தொடர்பில் இருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளதால், 'செபி' தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி, அதானி குழும முறைகேட்டுக்கு  மாதபி புச் உடந்தையாக இருந்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மாதபி புரி புச் முழுமையாக மறுத்துள்ளார். 

''எங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை. எங்களின் நிதிசார்ந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நிலையில், ஹிண்டன்பர்க்  உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கத்தை அளிக்க உள்ளோம்'' என்று மாதபி புச் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow