கொடநாடு வழக்கு.. தேவையற்ற கருத்துகளை நீக்க தயார்.. மனுவில் தெரிவிப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்துவிட்டு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பத்திகையாளர் மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமிக்கு நேரடி தொடா்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கொடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யூ சாமுவேல் நடந்து கொள்கிறார். அதை ஈடுகட்டும் வகையில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், மான நஷ்டஈடு வழக்கு பதில்மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, தவறான, தேவையற்ற கருத்துகளை கூறியிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனு ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேத்யூ சாமுவேல் தரப்பில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பதில் மனுவில் தெரிவித்த கருத்துகளை நீக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துக்களை நீக்குவது தொடர்பாக மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேல் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வேறு ஏதேனும் கருத்துக்களை நீக்க வேண்டுமா என்பது தொடர்பாக தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
What's Your Reaction?