பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டீ கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக், சில்வர் பாயில் கவர் உள்ளிட்டவற்றில் உணவுகளை பார்சல் செய்து கொடுக்கக்கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் இதனை மீறும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் நேற்று (நவ. 17) முதல் பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் பார்சலை பிரித்து பார்த்த அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். அதில் பிரியாணி சில்வர் பாயில் பேப்பரில் பார்சல் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக இதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ உணவு பாதுகாப்புத்துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து பிரியாணி பார்சல் வழங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட கடையை கண்டுபிடித்து கடையை சீல் வைத்தனர். இதுமட்டுமில்லாமல், உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின் படி கடையின் உரிமத்தை ரத்து செய்ததோடு அக்கடையின் உரிமையாளருக்கும் ரூ. 5000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில பிரியாணி கடைகளில் உடனடியாக பிரியாணியை விற்பனை செய்துவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே உணவு பாதுகாப்புத் துறை மூலம் நடத்தப்பட்ட சோதனையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே அதனை மீறி, மீண்டும் இது போன்ற சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடையின் உரிமையாளர் மீது 5000 ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி அவரது கடை உரிமைத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.