புத்தாண்டு கொண்டாட்டம்.. பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்.. 242 வாகனங்கள் பறிமுதல்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கில புத்தாண்டை இன்று வெகு விமர்சையாக கொண்டாடினர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். சென்னையில் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க அரசு தடை விதித்திருந்தது.
இளைஞர் பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் வண்ணம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மெரினா, இசிஆர் போன்ற கடற்கரைகளில் இரவு 7 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்னை காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஓட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவு வாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும், விருந்து நடைபெறும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் ஸ்திரத்தன்மைமையை உறுதி செய்ய பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது. வாகனங்களை அந்தந்த ஓட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்த வேண்டும். சாலைகளில் எந்த காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக் கூடாது.
மதுபானங்களை அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாற வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்களை வழங்கக்கூடாது. காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும். பெண் பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும். வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன சாகசங்களை கட்டுப்படுத்தும் விதமாக 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்து 242 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
What's Your Reaction?