புத்தாண்டின் போது நடந்த அதிர்ச்சி.. ரவுடி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு
சென்னையில் நேற்று ரவுடி வீட்டின் முன்பு மற்றொரு ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி அலெக்ஸ். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ரவுடி நவீன் உள்பட 6-க்கும் மேற்பட்டோரை போலீசார் அப்போது கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
நேற்று முன்தினம் நவீன் வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றுவிட்டு அம்பத்தூர் நோக்கி சென்றார். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் நவீனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். நவீனை ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரவுடி அலெக்ஸின் கூட்டாளிகள் தான் கொலை செய்ததாக போலீசார் சந்தேகித்துள்ளனர். அது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு நடந்து கொண்டிருக்கும் போது வில்லிவாக்கம் பாரதி நகருக்குள் புகுந்த ரவுடி கும்பல் ஒன்று ரவுடி அலெக்ஸ் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டி வீசி விட்டு தப்பி ஓடினர். அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வரும் வில்சன் என்பவர் வெளியே வந்து பார்த்த போது கதவு பகுதியில் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வில்சன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ்டார் தடயங்களை சேகரித்து தப்பியோடிய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாரதி நகர் பகுதியில் அடிக்கடி அடையாளம் தெரியாத சிலர் இரவு நேரங்களில் பிரச்சனை செய்து வருவது, மது போதையில் தகராறில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், போலீசார் தெருவில் சிசிடிவிக்கள் பொருத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?