ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Dec 24, 2024 - 08:46
 0
ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நாட்டில்  மத்திய அரசு பள்ளிகள், மாநில அரசு பள்ளிகள் என இரு பிரிவுகளாக பள்ளிகள்  செயல்பட்டு வருகிறது. இதில்  மாநில அரசு பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளில் பல்வேறு கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அதே நேரத்தில் மத்திய அரசு பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளில் வேறு கொள்கைகள் செயல்பட்டு வருகிறது.  இதனால், மத்திய மாநில அரசு பள்ளிகளின் தேர்வு முறைகள் அனைத்தும் வேறுபடும்.

தொடர்ந்து, மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம்   ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு இறுதித் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும் அவர்கள் ஆல் பாஸ் முறையில் வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டு வந்தனர். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும் தொடர்ந்து மாணவர்கள் கல்வி பயின்றிடவும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்துள்ளது. அதன்படி,  ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்கின்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதன்படி,  ஐந்து முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால் இரு மாதங்களில் அவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும். மீண்டும் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர வேண்டும் என அறிவித்தது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிரியர்களும் கல்வியாளர்களும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறையால் மாணவர்களின் இடை நிற்றல்  அதிகரிக்கும் என்றும் இதனால் மாணவர்கள் கல்வி பயிலாமல் பிற வேலைகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்பதால்  மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள இந்த முறையை கைவிட்டு மீண்டும் பழைய நடைமுறையே தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிகளின் தேர்சி முறையில் எந்த மாற்றம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஆல் பாஸ் இல்லை என்கின்ற திட்டத்தை ஏற்பதில்லை எனவும் தற்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கான புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகள் நிறைவுறும் தருவாயில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow