பட்டப்பகலில் நடந்த கொள்ளை.. வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த ஷாக்

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

Dec 24, 2024 - 09:10
 0
பட்டப்பகலில் நடந்த கொள்ளை.. வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த ஷாக்
கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் கைது செய்தனர்

சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெரு பகுதியில் சில தினங்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, வேறு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையை  அறுத்து சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாததால் மர்ம நபர்களை தேடுவதில் தொய்வு ஏற்பட்டது. 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டத்தில் அவர் ஹரி பிரசாத் என்பதும் சவுகார்பேட்டை கோவிந்தப்பா தெருவில் உள்ள ஒரு நாட்டு மருந்து கடையில் 10 நாட்களுக்கு முன்பாக பணிக்கு சேர்ந்து அங்கு கலெக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.  மர்ம நபர்கள் பறித்து சென்ற பையில்  பணம் இல்லை என்பதாலும் பயத்தின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட ஹரி பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இருப்பினும், போலீசார் இருசக்கர வாகனங்களில் வந்து கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்ற விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லை என்பதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் எங்கிருந்து கிளம்பினார்களோ? அந்த இடத்தை கண்டறிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய பூக்கடை பகுதியைச் சேர்ந்த நரேஷ், கண்ணன், மகேஷ் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்,  இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட நபர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரின் வழிகாட்டுதலின் பேரில்  ஹரி பிரசாத்தின் பையை மிரட்டி பறித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என நினைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நிலையில் அந்த பையில் பணம் இல்லை என்பதால் அதிருப்தி ஏற்பட்டதாகவும்  கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது  கீழே விழுந்ததில் குற்றவாளிகள் இருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow