Theni Rescue Operation : தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
இந்நிலையில், நள்ளிரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொழுக்குமலை டாப் ஸ்டேஷன் வடக்கு மலை குரங்கணி போடி மெட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது. இதன் காரணமாக தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு கொழுக்குமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கு தோட்ட பராமரிப்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறை படையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்த தோட்ட தொழிலாளர்கள் ஜெயபிரகாஷ் (50), அவரது மனைவி ரஞ்சிதம் (45), ராஜேந்திரன் (55), அவரது மனைவி லட்சுமி (50), ராஜா (55), அவரது மனைவி வனம் (40) மற்றும் 5க்கும் மேற்பட்ட குழந்தைகளை கயிறுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். முன்னதாக, நள்ளிரவு நேரம் என்பதால் கூலித் தொழிலாளர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் அவர்கள் விடிய, விடிய வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்துள்ளனர்.
நீண்ட நேரம் போராடி தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப் பகுதிகளில் விவசாயகூலித்தொழில் செய்ய தொழிலாளர்கள் வர வேண்டாம் என்றும் வனத்துறையினரும், காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் தண்ணீர், வராக நதியில் கலந்து செல்வதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.