பெற்றத் தாயை கொடூரமாகத் தாக்கிய பாசக்கார மகள்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!
சென்னையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை சாலையில் இழுத்து போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய "பாசக்கார" மகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் கனகசபை தெருவைச் சேர்ந்தவர் திரிலோகசுந்தரி. இவரது தாயார் 64 வயதாகும் ஆதிலட்சுமி. இவரின் கணவர் இறந்து விட்டதால் 2 கடைகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து தனது மூத்த மகளான திரிலோகசுந்தரியுடன் வாழ்ந்து வந்தார். சொந்த வீடு, கடைகள் இருப்பதால் அதனை பிரித்து தரும்படி தாய் ஆதிலட்சுமியுடன் திரிலோகசுந்தரிஅடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றியதால் கடந்த 6 ஆம் தேதி இரவு ஆதிலட்சுமி, தனது வீட்டின் அருகே சாலையோரமாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த திரிலோக சுந்தரி, அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி சாலையில் இழுத்து சென்று கொடூரமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பெற்றத் தாயை ஈவு இரக்கமற்று தாக்குவதை பார்க்கும் போதே மிகுந்த வேதனை அளித்தது எனவும் குடும்பப் பிரச்சனை என்பதால் தங்களால் தடுக்க முடியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஆதிலட்சுமி கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அவரது இரண்டாவது மகள் மற்றும் உறவினர்கள் கவனித்து வருகின்றனர். சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் ஆதி லட்சுமியிடம் புகாரை பெற்றனர்.
தன் மீது புகார் வந்ததையடுத்து திரிலோக சுந்தரி தப்பி ஓடி விட்டார். எம்ஜிஆர் நகர் போலீசார் திரிலோக சுந்தரி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தீவிர தேடுதலுக்கு பின்தலைமறைவான திரிலோகசுந்தரியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதிலட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை வந்து குடியேறி விட்டார். அவரது கணவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். இப்படி கஷ்டப்பட்டு திரிலோக சுந்தரியை வளர்த்த தாயை சொத்து பணத்திற்காக மனிதாபமானமற்ற முறையில் தாக்குவது கண்ணீரை வரவழைப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?