சென்னையை அதிர வைத்த ஈசிஆர் சம்பவம்.. தாம்பரத்தில் கார்கள் பறிமுதல்
சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுக கொடி பொருந்திய சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் இளம்பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வரைலானது. இதைத்தொடர்ந்து, நள்ளிரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அதிமுக, பாஜக போன்ற கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் நள்ளிரவு 2 மணியளவில் இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், முட்டுக்காடு படகுகுழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்ப்பதற்காக காரை அங்கு நிறுத்தியுள்ளனர்.
அப்போது அவர்களின் கார்களுக்கு பின்னால், திமுக கொடி கட்டிய சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்த இளைஞர்கள் பெண்களின் காருக்கு பின்னால் தங்களது காரை நிறுத்தியுள்ளனர். முதலில் அங்கிருந்து பெண்கள் சென்ற கார் கிளம்பி உள்ளது. இதையடுத்து, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த இளைஞர்கள் அவர்களது காரில் சென்றுள்ளனர்.
இதைதொடர்ந்து திமுக கொடி கட்டியிருந்த இளைஞர்களின் காரும் கிளம்பியது. அவர்கள் இளம்பெண்கள் சென்ற காரை சில கிலோ மீட்டர் தூரம் விரட்டியுள்ளனர். இதனால், அச்சமடைந்த பெண்கள் இளைஞர்கள் காரை துரத்துவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் தங்களது காரை இளம்பெண்களின் காருக்கு முன்னால் நிறுத்தி அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர், அந்த காரிலிருந்து இறங்கிய ஒருவர் இளம்பெண்கள் வந்த காரை நோக்கி ஆவேசமாக ஓடி வந்து காரை தட்டி மிரட்டியதாக தெரிகிறது. மேலும், காருக்குள் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அச்சம் அடைந்த பெண்கள் தங்களது காரை சில கிலோ மீட்டர் தூரத்துக்கு பின் நோக்கி இயக்கியுள்ளனர். பின்னர் ஒருவழியாக கானத்தூர் பகுதியில் தங்களின் அடுக்குமாடி குடியிருப்புக்குச் வந்து சேர்ந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கானாத்தூர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது நிறுத்தப்பட்டிருந்த பெண்களின் கார், அங்கிருந்து புறப்படும்போது இளைஞர்களின் காரை உரசிச் சென்றதாகவும் அதற்கு நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை விரட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை புகாரளித்த பெண் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈசிஆரில் பெண்களின் காரை துரத்திச் சென்ற இளைஞர்களின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கார்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் தாம்பரம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து இந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?