மருத்துவர் கத்திகுத்து விவகாரம்... பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்..
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு பிறகு, மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்திருந்தனர். போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் இன்று (நவ. 13) நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, விக்னேஷ் என்ற இளைஞர் அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து உடனடியாக மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்றும், இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று கூறியுள்ளார்.
பட்டப்பகலில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து, திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று விமர்சனம் செய்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வைகைச்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். மேலும் நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அரசு மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டினர்.
மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?