வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை.. 15 நாட்கள் நடைபெறவுள்ளதாக மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழகத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்கள் 27 நகர்பகுதிகளில் உள்ள 50 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் உள்ள 2 கோடி பேருக்கு வரும் 13-ஆம் தேதி முதல் முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்கள் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் தொழுநோய் கண்டறிதல் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகளிடையே ஸ்பார்ஷ் தொழுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிமொழி வாசிக்க கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியில் மகளிர் முன்னேற்றம் என்கிற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நான் முதல்வன் திட்டம் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும் திறன் மேம்பாட்டையும் அளித்து வருகிறது. முதலமைச்சர் தொடங்கிய இத்திட்டத்தில் 28 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவிகள், உயர் கல்விக்கு செல்லும் போது மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. உலகளவில் மகளிர் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட மிக முக்கியமான திட்டம் புதுமைப் பெண் திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று 4.25 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று உயர்கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.
பெண்கள் உயர்கல்வி சேர வேண்டும் என்கிற வாய்ப்பையும், உந்துதலையும் இத்திட்டம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் உயர்கல்வியில் மாணவியர் சேர்க்கை வீதம் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள பெருமை இது. பெண்களைப் போன்று மாணவர்களுக்கும் தமிழ்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 3.28 லட்சம் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
தொழுநோயாளர்களை புறந்தள்ளுவது, அவமதிப்பது, பாரபட்சம் காட்டும் எதனையும் பொதுமக்கள் செய்யக் கூடாது என்கிற அடிப்படையில்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்கள் 27 நகர் பகுதிகளிலும் 50 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் 2 கோடியே ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 85 மக்களுக்கு தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் வரும் 13-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்கள் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாமில் 320 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டனர். தொழு நோயாளிகளில் 40 சதவீதத்திற்கும் மேல் அங்க குறைபாடு உள்ள தொழுநோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ஆயிரமாக இருந்ததை இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கினார். கடந்த ஆண்டில் 28.08 கோடி செலவில் 11,702 நபர்களுக்கு 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
கடந்தாண்டு 3.83 கோடி செலவில் 15,759 சுயபாதுகாப்பு பெட்டகங்களும், 38 லட்சம் ரூபாய் செலவில் 9,462 எம்.சி.ஆர் காலணிகளும், 44,661 நபர்களுக்கு மாத்திரைகளும், 11.76 லட்சம் செலவில் 98 மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 10 தொழுநோய் மறுவாழ்வு மையங்களில் 1001 பேரும், அரசு தொழுநோய் மருத்துவமனையில் வெளி நோயாளிகளிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோய் இல்லா தமிழ்நாடு என்கிற இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?