ஃபெஞ்சல் புயல் எதிரொலி: மழை நீரில் தத்தளிக்கும் பேருந்து நிலையம்
சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரியின் காரைக்கால், மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 140 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நகராட்சி ஊழியர்கள் தொடர் பணியில் ஈடுபட்டிருந்தாலும் மழையின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுரங்கப்பாதை உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் இன்று இரவு 7 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக எழும்பூர், பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர் அஜாக்ஸ் ஆகிய 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையின் முக்கிய இடமான தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பேருந்துகள் தண்ணீரில் மிதந்த படி நிற்கின்றன . மேலும், பேருந்தை இயக்கும் அரசு பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தற்போது தமிழக அரசின் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் நீரை சீர் செய்து வருகின்றன. இருந்தாலும், முக்கியமான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி பணியாளர்கள் கண்டும் காணாமல் இருப்பது கவலை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
What's Your Reaction?