தூக்க மாத்திரை கொடுத்து குழந்தை கொலை.. தாய் தற்கொலை முயற்சி
கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி செய்த இளம் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தென்காசி மாவட்டம் அருளாச்சி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் முஜீத் என்ற ஆண் குழந்தை இருந்தது.
சங்கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக குழந்தையுடன் தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் சமாதானம் பேசி கடந்த சில நாட்களுக்கு முன் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.
மீண்டும் கணவனுடன் சண்டை ஏற்படவே, கோபித்துக் கொண்ட சங்கீதா தனது குழந்தை முஜித்தை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். அவரை காணாமல் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம் வழியாக சென்னை செல்லும் பொதிகை ரயில் முன் சங்கீதா தனது குழந்தையுடன் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். ரயில் புறப்படும் நேரம் என்பதால் பெண் விழுந்ததை பார்த்த உடன் ரயில் நிறுத்தப்பட்டது.
தாயும் சேயும் மயக்க நிலையில் இருந்ததால் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக இருவரையும் 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது குழந்தை முஜீத் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
சங்கீதாவுக்கு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் கண்விழித்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆறு தூக்க மாத்திரைகள் வாங்கியதாகவும், அதில் நான்கை தான் சாப்பிட்டுவிட்டு இரண்டை குழந்தைக்கு கொடுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர் தற்போது சங்கீதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?