பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சமூக வலைத்தளங்களில் எந்தப் பக்கம் பார்த்தாலும் டிக்-டாக் அட்ராசிட்டிகளுக்கு பஞ்சமே இருக்காது. ஒருகட்டத்தில், ஆபாசம், அச்சுறுத்தல் என டிக்-டாக் எல்லை மீறி போக, அதுக்கு மொத்தமாக அரசாங்கமே ஆப்பு வைத்தது. டிக்-டாக் ஒழிந்தது என நினைத்தால்.., அடுத்து ட்ரெண்டிங் ஆன ரீல்ஸ்.., 2கே கிட்ஸ்கள் முதல் சீனியர் சிட்டிஸன்களை வரை அனைவரது ஃபேவரைட் ஸ்பாட்டாகிவிட்டது.
இதில் ரொம்பவே ஆபத்தான ஒன்றாக மாறிவிட்டது பைக் சாகசம். ரீல்ஸ் போடுவதற்காகவே பைக்கில் லாங் டூர் செல்வதும், சாகசம் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் புள்ளீங்கோ ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோயம்பேடு மேம்பாலத்தில், அங்கும் இங்குமாக பைக்கில் ரவுண்டு கட்டும் அந்த இளைஞர், வீலிங் செய்தும் அட்ராசிட்டி செய்துள்ளார். வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் கோயம்பேடு மேம்பாலத்தில், இன்ஸ்டா ரீல்ஸில் அதிக லைக்ஸ் வாங்குவதற்காக இளைஞர் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளது, வாகன ஓட்டிகளை அச்சமடைய வைத்துள்ளது.
இதுபோன்ற ரீல்ஸ் புள்ளீங்கோ மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரீல்ஸ் மோகத்தால் விதவிதமான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள், விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?