தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி :  தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு 

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி :  தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு 
கோப்பு படம்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 237  பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ  முதல் நிலை எழுத்துத் தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்விற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏழு லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஐந்து லட்சத்து 40 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது. 

முதல்நிலைத்  தேர்விற்கான முடிவுகள் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2 தேர்வுகள் இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு நிறைவடைந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தனி முதன்மைத் தேர்வுகள் (Main Examination) நடத்தப்படும். இதில், குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது.

முதல் தாள் தமிழ் மொழித் தகுதி தேர்வாக பேப்பர் மற்றும் பேனா முறையில் நடத்தப்படும். இரண்டாம் தாள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இதற்கிடையே அண்மையில்  குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி  வழக்கு நடத்துனர் நிலை இரண்டு காண தேர்வுகள் நடத்தபட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க முடியவில்லை என்றும் மறுத்தேர்வு நடத்திட வேண்டும் என்றும் தேர்வாளர்கள் தேர்வாணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை பரிசீலனை செய்த தேர்வாணையம் அதேர்வினை ரத்து செய்து அறிவித்தது. இதையடுத்து குரூப் 2ஏ பணியிடங்களுக்கு முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் (OMR) தாள் முறையில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று  (பிப் 8) நடைபெறுகிறது.  காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இத்தேர்வில்  21 ஆயிரத்து 563 பேர் தாள் ஒன்று தமிழ் மொழி தகுதி தேர்வும், பொது அறிவு தேர்வும் எழுதுகின்றனர்.

மேலும் பொது தமிழ் தேர்வை 16 ஆயிரத்து 457 பேரும், பொது ஆங்கில தேர்வை 5 ஆயிரத்து106 பேர்  எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 82 தேர்வு மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.