அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

தமிழகம் முழுவதும் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவர் கடந்த டிசம்பர் 14-ம் தேதி உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

அதிமுக, பாஜக, தேமுதிக உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்தத் தொகுதியில், மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களுக்காக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன?

அதாவது, மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று ( பிப். 8) 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.