தலைநகரில் அதிகரிக்கும் போதைப்பொருள்... இன்ஸ்டாகிராமில் மெத்தப்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது..!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி வந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து போது போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளுடன் சிலர் சுற்றி வருவதாக புளியந்தோப்பு துணை ஆணையரின் தனிப்படை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கௌதம் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் அயனாவரம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் (ஜிப்டோ) தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருவது தெரிய வந்தது.
மேலும் பாரிமுனையை சேர்ந்த ஹக்கீம் என்பவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மணிமாறன் சிறையில் இருந்து போது நாசீர் மற்றும் மாஜி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவர்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் பற்றிய தகவல்களை பெற்று வெளிமாநிலத்திற்கு சென்று மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை வாங்கி வந்து இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சென்னை நபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் மணிமாறன், சிவக்குமார், கௌதம் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 7 கிராம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் யார் யார் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
What's Your Reaction?