மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி
இயக்குநர் பா.இரஞ்சித் நடத்திய ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா.இரஞ்சித் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக இவர் சாதி பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை தனது படத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். ’நீலம் புரொடக்ஷன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் ’நீலம் பண்பாட்டு மையம்’ மூலம் ஒவ்வொரு வருடமும் ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசை நிகழ்சியை நடத்தி வருகிறார். மேடை மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கான மேடையாக இது கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெற்று வருகிறது.
ஐந்தாவது வருடமாக 2024- ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், மேடை ஏற்றப்படாத பல கலைஞர்களும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார்.
தொடர்ந்து, பேசிய அவர், இதுபோன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது. கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விஷயம். இயக்குனர் பா.இரஞ்திற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும், இதற்கு என்னுடைய ஆதரவும் , பங்களிப்பும் எப்போதும் உண்டு என்று பேசினார்.
What's Your Reaction?