சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம், நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த மாதம் 20ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. கங்குவாவை தொடர்ந்து தனது 44வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் அடுத்தப் படம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் செட்டிலாகிவிட்ட சூர்யா, பாலிவுட்டில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் கர்ணன் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக தமிழில் ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அதன்படி சூர்யாவின் 45வது படமான இதனை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் படங்களின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45 படத்தை இயக்கவும் ரெடியாகிவிட்டார்.
மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போல் இல்லாமல், பக்கா ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாம் சூர்யா 45. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில்லுன்னு ஒரு காதல், ஆயுத எழுத்து, 24 என இதுவரை மூன்று படங்களில் சூர்யா – ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது சூர்யா 45 படத்திலும் ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால், சூர்யா 45 படப்பிடிப்பும் சீக்கிரமே தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் சூர்யா 45 படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அபிஸியல் அப்டேட்கள் கங்குவா ரிலீஸுக்குப் பின்னர் அல்லது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சூர்யாவின் வாடிவாசல் படம் எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஹீரோவாக சூர்யா கமிட்டாகியுள்ளார். ஆனால், இந்தப் படம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி இன்னும் தொடங்கவில்லை. விடுதலை 2ம் பாகம் ரிலீஸான பின்னர், வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதை நிலவரப்படி ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்திற்காக சூர்யா கால்ஷீட் கொடுத்துள்ளதால், வாடிவாசல் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை.